சிறையில் கூட தள்ளுங்கள்; அவளோடு வாழ முடியாது... குமுறிய 2-வது கணவர்
விபினின் மனைவி கணவரின் புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்ததும், மொட்டை போட்டுக்கொண்டு தோற்றமே தெரியாத வகையில் விபின் உருமாறியிருக்கிறார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் விபின் குப்தா (வயது 37). சில நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார். இதனால், பதறி போன விபினின் மனைவி சமூக வலைதளம் வழியே உதவி கேட்டு கெஞ்சினார்.
அதில், ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறேன் என கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. போலீசாரும் அவரை கண்டுபிடிக்க போதிய அளவுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.
எனினும், இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விபினின் மொபைல் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அவர் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கி பழைய போனில் போட்டதும் அவர் இருக்கும் இடம் போலீசாருக்கு தெரிய வந்தது.
நொய்டாவில் அவர் இருப்பது தெரிந்ததும், பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூட நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, திரையரங்கு ஒன்றில் படம் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக வெளியே வந்த அவரை, போலீசார் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் சீருடையில் இல்லாதபோதும், விபின் அவர்களை போலீசார் என அடையாளம் கண்டு கொண்டார். அடுத்து நடந்த விசயம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
போலீசாரிடம், அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? என கேட்டிருக்கிறார். வேறென்ன பெங்களூருவுக்கு திரும்புவோம் என போலீசார் கூறினர்.
உடனே ஆவேசமடைந்தவராய், என்னை சிறையில் கூட நீங்கள் தள்ளுங்கள். நான் வாழ்ந்து விடுவேன். ஆனால், ஊருக்கு திரும்ப முடியாது என கூறி மறுத்திருக்கிறார். காணாமல் போனது பற்றி அவருடைய மனைவி அளித்த புகாரை முடித்து வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். பல மணிநேரம் போராடி, பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளனர்.
பெங்களூரு திரும்பிய விபின், மனைவியை பிரிந்து சென்றதற்கான காரணங்களை கூறியிருக்கிறார். அவர், நான் 2-வது கணவர். 3 ஆண்டுகளுக்கு முன் அவரை (மனைவியை) சந்தித்தேன். விவாகரத்து பெற்றவராக, 12 வயது மகளுடன் இருந்த அவரை, திருமணம் ஆகாத நான் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
எங்கள் இருவருக்கும் 8 மாத பெண் குழந்தை உள்ளது என்றார். தொடர்ந்து, என்னுடைய சுதந்திரத்திற்கு அவர் திரை போடுகிறார். அரிசியோ அல்லது உணவின் ஒரு பகுதியோ சிந்தி விட்டால் சத்தம் போடுகிறார்.
அவர் விரும்பியபடி நான் ஆடை அணிய வேண்டும். ஒரு கோப்பை தேநீர் அருந்த கூட தனியாக நான் வெளியே செல்ல முடியாது என குமுறலை வெளியிட்டு உள்ளார்.
விபினின் மனைவி கணவரின் புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்ததும், தப்பிப்பதற்காக மொட்டை போட்டுக்கொண்டு தோற்றமே தெரியாத வகையில் விபின் உருமாறியிருக்கிறார்.
பெங்களூரு நகரை விட்டு சென்ற அவர் திருப்பதிக்கு பஸ்சில் சென்று, ரெயிலில் புவனேஸ்வருக்கு பயணித்து, டெல்லி வழியாக நொய்டாவுக்கு சென்றிருக்கிறார்.
எனினும், விபினின் இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றவை என அவருடைய மனைவி உறுதியாக மறுத்து அதற்கான விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.