பஞ்சாபில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி அதிரடியாக கைது
பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பகவந்த் மன் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் பகவந்த மன், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில், பகவந்த் மன் தலைமையிலான மந்திரி சபையில் சுகாதாரத்துறை இலாகா பொறுப்பை பெற்றிருந்த விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்தது. ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கோரியதாக கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் விஜய் சிங்க்லா, மந்திரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், மந்திரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே விஜய் சிங்க்லா கைது செய்யப்பட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததால் விஜய் சிங்க்லா மீது கடுமையான நடவடிக்கையை முதல் மந்திரி பகவந்த் மன் எடுத்ததாக கூறப்படுகிறது.
தனது சொந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் மீது இத்தகைய கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவது ஆம் ஆத்மி கட்சிக்கு புதிதல்ல. கடந்த 2015- ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் தனது மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுத்து இருந்தார்.
மந்திரி விஜய் சிங்க்லா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பகவந்த் மன் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து கெஜ்ரிவால், " பகவந்த் உங்களால் நான் பெருமை அடைகிறேன். உங்களின் நடவடிக்கை எனது கண்களில் ஆனந்த கண்னீரை வரவழைத்தது. இன்று ஒட்டு மொத்த தேசமும் ஆம் ஆத்மி கட்சியால் பெருமை அடைகிறது" என்று பதிவிட்டுள்ளார்.