புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது
வருகிற நவம்பர் 1-ந்தேதி கன்னட ராஜ்யோத்சவா தின விழாவில் மறைந்த நடிகா் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
வருகிற நவம்பர் 1-ந்தேதி கன்னட ராஜ்யோத்சவா தின விழாவில் மறைந்த நடிகா் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மலர் கண்காட்சி தொடக்கம்
பெங்களூரு லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி நேற்று லால்பாக்கில் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியில் லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடிகர் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் சிலைகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் தொட்டகாஜனூரில் உள்ள புனித் ராஜ்குமாரின் பூர்வீக வீடும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு லால்பாக்கில் 212-வது மலர் கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று காலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சிறப்பு வாய்ந்தது
பெங்களூரு லால்பாக்கில் நடைபெறும் மலர் கண்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 1922-ம் ஆண்டில் இருந்தே லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது சுதந்திர தினவிழா பவள விழாவையொட்டி லால்பாக்கில் நடைபெறும் மலர் கண்காட்சி சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மலர் கண்காட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இனிவரும் 10 நாட்களிலும் லட்சக்கணக்கான மக்கள் மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ராஜ்குமார், புனித் ராஜ்குமாரின் சிலைகள், புனித் ராஜ்குமாரின் பூர்வீக வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஏராளமான மக்கள் மலர் கண்காட்சியை காண வருவார்கள். மந்திரி முனிரத்னா தலைமையிலான அதிகாரிகள் மலர் கண்காட்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
புனித் ராஜ்குமாருக்கு விருது
புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) மரணம் அடைந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று நான் அறிவித்திருந்தேன். அதன்படி, கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ந் தேதி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும். புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெறுவார்கள். கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் ஆவார். இதுதொடர்பாக புனித் ராஜ்குமார் குடும்பத்தினருடன் ஏற்கனவே பேசி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
10-வது நபர்
கர்நாடகத்தில் முதல் முறையாக கடந்த 1992-ம் ஆண்டு நடிகர் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, குவெம்பு (கவிஞர்), நிஜலிங்கப்பா (அரசியல்), சி.என்.ஆர்.ராவ் (அறிவியல்), டாக்டர் ஜவரேகவுடா (கல்வி), டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி (மருத்துவம்), பீம்சென் ஜோதி (இசை) மடாதிபதி சிவக்குமார சுவாமி (சமூக சேவை), வீரேந்திர ஹெக்டே (சமூக சேவை) ஆகிய 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வீரேந்திர ஹெக்டேவுக்கு இந்த கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டு இருந்தது.