வேறு ஆதாரம் தேவை இல்லை.. மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை அளிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு
வேறு ஆதாரங்கள் இல்லையென்றாலும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
புதுடெல்லி,
மராட்டியத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், குடும்பத்தகராறு காரணமாக கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரருடன் சேர்ந்து தனது மனைவியின் கை, கால்களை கட்டி முகத்தை மூடி மண்எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். முன்னதாக அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அப்போது தனது கணவர் மற்றும் கொழுந்தனார் செய்த கொடூரங்களை விவரித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இறந்து போன பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பீட் மாவட்ட கோர்ட்டு, அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. இதை மும்பை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த கோர்ட்டு, கடந்த 2016-ம் ஆண்டு அவரது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. ஏற்கனவே 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து இருந்ததை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கியது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் பூயன் தற்போது இறுதி தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதன்படி இறந்த பெண்ணின் மரண வாக்குமூலத்தை சரியான சாட்சியமாக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவரது கணவர் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.
எனவே 2 வாரங்களுக்குள் விசாரணை கோர்ட்டில் அவர் சரணடைந்து சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
வேறு ஆதாரம் தேவை இல்லை
இந்த வழக்கில் நீதிபதிகள் கூறுகையில், கொலை வழக்கில் பெறப்படும் மரண வாக்குமூலம் உண்மையானதாக இருந்தால் வேறு எந்த ஆதாரமும் இன்றி அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கலாம் என கூறினர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், 'ஒரு மரண வாக்குமூலம் உண்மையானது மற்றும் கோர்ட்டின் நம்பிக்கையை உறுதி செய்வதாக கண்டறியப்பட்டால், அதையே நம்பலாம். அத்துடன் எந்த ஆதாரமும் இல்லாமல் தண்டனைக்கான ஒரே அடிப்படையாக ஏற்கலாம்' என்று கூறினர்.
அதேநேரம் இந்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அது தானாக முன்வந்து வழங்கப்பட்டது, உறுதியானது, நம்பகத்தன்மை கொண்டது மற்றும் எந்தவித உள்நோக்கமும் இல்லாதது என்பதை கோர்ட்டு ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.