வழிவிடாமல் சென்ற கார்... கேள்வி கேட்ட பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல்


வழிவிடாமல் சென்ற கார்... கேள்வி கேட்ட பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
x

பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புனே,

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த பெண் ஜெர்லின் டிசில்வா. இவர் நேற்று முன்தினம் புனே பானேர்- பாசன் லிங் ரோட்டில் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக கார் ஒன்று சென்றது. காரை ஓட்டி சென்றவர் பெண்ணுக்கு வழி விடாமல் முன்னால் சென்றதாக தெரிகிறது. எனவே பெண், காரை ஓட்டிச்சென்றவரிடம் ஒழுங்காக காரை ஓட்டிச்செல்லுங்கள் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக காரை ஓட்டிச்சென்றவருக்கும், பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நபர், பெண்ணின் முகத்தில் கையால் ஓங்கி குத்தி உள்ளார். காரில் இருந்தவரின் மனைவியும் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரின் போலீசார் காரை ஓட்டிய 57 வயது நபா் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தாக்குதலுக்கு ஆளான பெண், மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியபடி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து பேசி சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.




Next Story