புனே: வீட்டுவசதி சங்க கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி பலி!


புனே: வீட்டுவசதி சங்க கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி பலி!
x

புனே நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

புனே,

கழிவுநீர் தொட்டியில் சுத்தம்செய்வதன் மூலம் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவதா என்று கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, மராட்டிய மாநிலம் புனே மாநகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

புனேவில் உள்ள ஒரு தனியார் வீட்டுவசதி சங்கத்தின் கழிவுநீர் அறையை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர்.

செப்டிக் டேங்கில் இறங்கி அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும்போது, இந்த சோக சம்பவம் நடந்தது. அதில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போனார்.

வீட்டுவசதி சங்கத்தில் வசிப்பவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விசாரணையில், மூச்சுத் திணறல் காரணமாக 2 தொழிலாளர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காலை 7 மணியளவில் தகவல் கிடைத்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர்.

வீட்டுவசதி சங்கத்தில் வசிப்பவர்கள் செப்டிக் டேங்கிற்கு வெளியே மொத்தம் மூன்று ஜோடி காலணிகளை பார்த்ததாக போலீச்டம் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது நபர் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கியிருக்கலாம். மூன்றாவது தொழிலாளியை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

நாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை கைமுறையாக சுத்தம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம், நகரின் கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பாக சுத்தம் செய்து பராமரிக்க 'பாண்டிகூட்' என்ற மூன்று ரோபோக்களை நிறுவியுள்ளது.இந்த உயர் தொழில்நுட்ப ரோபோக்கள் கழிவுநீரை திறம்பட சுத்தம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story