புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு


புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு
x

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2-ந்தேதி மதியம் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் ஒரே ஒரு கேமராவில் மட்டுமே சிறுமி நடமாட்டம் குறித்த வீடியோ பதிவாகி இருந்தது. எனவே அந்த சிறுமி சோலை நகர் பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இதை வைத்து போலீசார் வீடு வீடாக சென்று மாணவி குறித்து விசாரித்தனர்.

மேலும் சந்தேகத்தின்பேரில் கஞ்சா ஆசாமிகள் 5 பேரை பிடித்து விசாரித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் உடல் அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story