பி.யூ.சி. முதலாமாண்டு சேர்க்கையில் கட்டண சலுகை வழங்குவதாக கூறி எஸ்.எஸ்.எல்.சி.யில் முழுமதிப்பெண் பெற்ற மாணவியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி


பி.யூ.சி. முதலாமாண்டு சேர்க்கையில் கட்டண சலுகை வழங்குவதாக கூறி எஸ்.எஸ்.எல்.சி.யில் முழுமதிப்பெண் பெற்ற மாணவியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி
x

பி.யூ.சி. முதலாமாண்டு சேர்க்கையில் கட்டண சலுகை வழங்குவதாக கூறி ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக தனியார் கல்லூரி மீது எஸ்.எஸ்.எல்.சி.யில் முழுமதிப்பெண் பெற்ற மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

சிக்கமகளூரு;

மாணவி குற்றச்சாட்டு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூரை சேர்ந்தவர் சாரிதா. இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி 625-க்கு 625 மதிப்பெண் பெற்றார். இந்த நிலையில் மாணவி சாரிதா மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான், மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படிக்க முடிவு செய்தேன். இதற்காக அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு முன்பதிவு செய்து இருந்தேன். அப்போது என்னிடம், கல்லூரி நிர்வாகத்தினர் கல்வி கட்டணம் ரூ.2½ லட்சம் என்றும், மேலும் தேர்வு முடிவு வெளியானதும் 75 சதவீத மதிப்பெண் பெற்றால் ரூ.50 ஆயிரம் கட்டணம் குறையும் என்றும், 100 சதவீத மதிப்பெண் பெற்றால் ரூ.1 லட்சம் கட்டணம் குறையும் என்றும் தெரிவித்தனர்.

ரூ.50 ஆயிரம் மோசடி

இதை நம்பி நானும் ரூ.50 ஆயிரத்தை முன்கட்டணமாக கட்டினேன். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகி முழு மதிப்பெண் பெற்றதும் கல்லூரிக்கு சென்று கேட்டேன். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் கட்டண சலுகை எதுவும் கிடையாது என்றும், முழு கட்டணம் செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து வாங்கிய பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுக்கின்றனர். இதனால் கட்டண சலுகை என்று கூறி என்னிடம் தனியார் கல்லூரி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்துவிட்டது. இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story