காவிரி ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு: கர்நாடகத்தில் போராட்டம் தீவிரம்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அப்போது விவசாயிகள் எங்களுக்கு தண்ணீர் அல்லது விஷம் கொடுங்கள் என ஆவேசமாக கூறி உள்ளனர்.
மண்டியா:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துபோகும் போது எல்லாம் காவிரி நதி நீர் விவகாரம் பூதாகரமாக எழுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால் காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தபடி தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க முடியவில்லை.
இதனால், காவிரி நீர் கேட்டு தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கர்நாடகம்-தமிழகம் இடையே மீண்டும் நதிநீர் பங்கீடு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்பேரில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதியில் இருந்து கடந்த 7-ந்தேதி வரை 9 நாட்கள் சராசரியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு நிறுத்தியது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மீண்டும் பரிந்துரை செய்தது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு பரிந்துரைபடி காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
அதனை ஏற்று கடந்த 19-ந்தேதியில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து நேற்று காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் கூறியபடி தண்ணீர் திறக்கும் இக்கட்டான நிலைக்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கண்டித்து விவசாயிகள் மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியா சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே கர்நாடக விவசாய அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் பெங்களூரு-மைசூரு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சாலையில் உருண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'காவிரி நீர் எங்கள் உரிமை. குடிநீருக்கே தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது எப்படி?. மண்டியா விவசாயிகள் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளனர். மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றினால் மண்டியா, மைசூரு, பெங்களூருவில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் இருக்காது. அரசு எங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் அல்லது விஷம் கொடுக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறினர்.
இதேபோல், மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் மேல்கோட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டண்ணய்யா தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர் கூறுகையில், 'காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இது எங்களுக்கு இழைக்கப்படட பெரும் அநீதியாகும். காவிரி நீரை குடிக்கும் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். இந்த விவகாரத்தில் அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது' என்றார்.
இதேபோல் மைசூருவிலும், கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மைசூரு பசவேஸ்வரா சர்க்கிளில் கர்நாடக ராஜ்ய ரைத்தா சங்கம், ஹசிரு சேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில அரசுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மேலும் காவிரி விவகாரத்தில் எங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை கிழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் மைசூருவில் கர்நாடக சேனா படை என்ற கன்னட அமைப்பினர் துடைப்பத்தால் சாலையில் அடித்து போராட்டம் நடத்தினர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழக அரசை கண்டித்து தங்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாக கோஷம் எழுப்பினர்.
இதேபோல், மைசூருவில் உள்ள காடா (காவிரி நீர்ப்பாசனத்துறை) அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரும்பு தடுப்பை வைத்து விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள், காடா அலுவலக வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்கள் மத்திய, மாநில அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதேபோல், சாம்ராஜ்நகரில் புவனேஸ்வரி சர்க்கிளில் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் நடுரோட்டில் அமர்ந்தும், பானைகளை உடைத்தும், டயர்களை கொளுத்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தலைநகர் பெங்களூருவிலும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பெங்களூரு காந்திநகரில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள், தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது எனவும் கோஷம் எழுப்பினர். மேலும் விதான சவுதாவை முற்றுகையிட அவர்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது போலீசார், நாராயணகவுடா மற்றும் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினரை கைது செய்து அங்கிருந்து வேனில் அழைத்து சென்றனர். அந்த சமயத்தில், கர்நாடகத்துக்கு கருப்புநாள் என கூறிய நாராயணகவுடா, எக்காரணம் கொண்டும் காவிரியில் தண்ணீர் திறக்கக்கூடாது என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு பாதுகாப்பு
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தண்ணீர் திறப்பதால் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மண்டியாவில் வருகிற 23-ந்தேதி முழுஅடைப்பு
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கண்டித்து மண்டியா நகரில் வருகிற 23-ந்தேதி முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு சங்கங்களுடன் மாவட்ட விவசாய சங்கம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.