கோலார் தங்கவயலில் நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
அம்பேத்கர் சிலையை இடிக்க காரணமானவர்களுக்கு எதிராக கோலார் தங்கவயலில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கோலார் தங்கவயல்:
அம்பேத்கர் சிலையை இடிக்க காரணமானவர்களுக்கு எதிராக கோலார் தங்கவயலில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
முழு அடைப்பு
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பூங்காவில் உள்ள அம்பேத்கர் பவனை இடிக்கவும், அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த சி.எம்.ஆறுமுகத்தின் சிலை மற்றும் அவரது நினைவிடத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், கோலார் தங்கவயலில் பரபரப்பு நிலவியதுடன் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவுக்கு காரணமானவர்களுக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் (இன்று) 2-ந் தேதி கோலார் தங்கவயலில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
அனைத்துகட்சி கூட்டம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் அனைத்துகட்சி தலைவர்கள் அடங்கிய அவசர ஆலோசனைக் கூட்டம் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் முன்னாள் நகரசபை தலைவர் முரளி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முழு அடைப்பு போராட்டத்தின் போது போலீசார் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அவசியமாக உள்ளது. எனவே கோலார் தங்கவயலில் முழு அடைப்பு போராட்டத்தை ஒத்திவைக்கும்படி போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் 2-ந் தேதி(இன்று) நடக்க இருந்த முழு அடைப்பு போராட்டம் வருகிற 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.