கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மைசூரு:-
ஆர்ப்பாட்டம்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக காவிரி டெல்டா விவசாயிகள், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கால்வாய்களில் திறக்க கோரியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்தும் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை முன்பு போராட்டம் நடத்தினர்.
இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடனே நிறுத்த வேண்டும்
அப்போது அவர்கள், கர்நாடகாவில் போதுமான அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அணைகளும் நிரம்பவில்லை.
இப்போது அணையில் உள்ள தண்ணீரின் அளவை கணக்கிட்டால் அது மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்குமே போதாது. அப்படி இருக்கும்போதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சரியானது அல்ல. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். மேலும் கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
அகண்ட காவிரியாக...
இதேபோல் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு திருவேணி சங்கமம் பகுதியிலும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
திருமாகூடலு திருவேணி சங்கமம் பகுதியில் தான் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்வது குறிப்பிடத்தக்கது.