காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சிக்கமகளூருவில் முழுஅடைப்பு அமைதியாக நடந்தது
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சிக்கமகளூரு உள்பட 3 மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
சிக்கமகளூரு-
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சிக்கமகளூரு உள்பட 3 மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
முழுஅடைப்பு போராட்டம்
கர்நாடகத்தில் நேற்று காவிரி பிரச்சினைக்காக முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அதுபோல் சிக்கமகளூரு, தாவணகெரே மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. சித்ரதுர்கா ஒனகே ஒபவ்வா சர்க்கிளில் 100-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் ரத்தத்தால் பதாகைகளில் காவிரி நீரை கொடுக்க மாட்டோம் என்று வாசகம் எழுதி போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
தாவணகெரேவில் சாலையில் டயர்களை கொளுத்திப்போட்டு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சிக்கமகளூரு டவுன் அனுமந்தப்பா சர்க்கிளில் இருந்து கன்னட அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடனும், மண் பானைகளுடனும் சாலை மறியலில் ஈடுபட்டு, காவிரி நீருக்காக பிச்சை எடுப்பதுபோல் நடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
பரபரப்பு
பசவனஹள்ளி குளம் அருகே டயர்களை கொளுத்திப்போட்டு கன்னட அமைப்பினர் வாகன போக்குவரத்துக்கு தடை செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். அப்போது வாகன ஓட்டிகளுக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து அனுமந்தப்பா சர்க்கிளில் கன்னட அமைப்பின் ஒரு பிரிவினர் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடூர் டவுனில் ராஜி என்பவர் கத்தியால் கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில்களில் வந்த பயணிகள் அவதி
போராட்டத்தையொட்டி சிக்கமகளூரு, தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், வாடகை கார்கள் போன்ற எந்தவொரு வாகனங்களும் ஓடவில்லை. ஓரிரு அரசு பஸ்கள் ஓடின. ஆனால் அவைகளும் பயணிகள் இன்றி காலியாக ஓடின. முழுஅடைப்பால் ரெயில்களில் வந்த பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
மொத்தத்தில் சிக்கமகளூரு, தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய 3 மாவட்டங்களிலும் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.