அக்னிபத் திட்ட எதிர்ப்பு; பீகாரை தொடர்ந்து பஞ்சாப் ரெயில் நிலையம் சூறையாடல்


அக்னிபத் திட்ட எதிர்ப்பு; பீகாரை தொடர்ந்து பஞ்சாப் ரெயில் நிலையம் சூறையாடல்
x

அக்னிபத் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில், பீகாரை தொடர்ந்து பஞ்சாப் ரெயில் நிலையம் இன்று சூறையாடப்பட்டு உள்ளது.

லூதியானா,



இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வன்முறையும் வெடித்து உள்ளது. கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் பரவலாக நடந்துள்ளன.

பீகாரின் சம்பரான் மாவட்டத்தின் பச்சிம் பகுதியில் துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு மீது நேற்று கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சென்றது. இதேபோன்று, பீகாரில் பா.ஜ.க. தலைவர் சஞ்ஜய் ஜெய்ஸ்வாலின் இல்லம் மீதும் நேற்று தாக்குதல் நடந்தது.

பீகாரில் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் புகுந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தி, தீ வைத்து விட்டு சென்றது.

நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன. இந்நிலையில், பீகாரை போன்று பஞ்சாப்பின் லூதியானா ரெயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்களில் சிலர் இன்று வன்முறையில் ஈடுபட்டனர்.

அவர்கள் கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளனர். ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் பயணிகள் அமர கூடிய நாற்காலிகளை பெயர்த்து ரெயில் செல்லும் தண்டவாள பகுதியில் வீசியுள்ளனர். இதனால், ரெயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

இதுபற்றி லூதியானா இணை ஆணையாளர் ஆர்.எஸ். பிரார் கூறும்போது, சம்பவம் பற்றி அறிந்ததும் உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு சென்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் 8 முதல் 10 பேர் வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவர்களை சிலர் அழைத்து வந்து, தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கான சில வீடியோக்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அவற்றை வைத்து வன்முறையில் ஈடுபட்ட மற்றும் அவர்களை தூண்டியவர்களை கண்டறியும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம் என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story