மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தும் கண்டுகொள்ளாததால் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தும் கண்டுகொள்ளாததால் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2023 2:52 AM IST (Updated: 10 Jun 2023 3:45 PM IST)
t-max-icont-min-icon

மலவள்ளியில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அவர்களை கண்டித்து புரசபை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹலகூர்:

மலவள்ளியில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அவர்களை கண்டித்து புரசபை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளுக்குள் வெள்ளம்

மண்டியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதேபோல் மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மழைநீர் கொட்டி தீர்த்தது. இதில் மலவள்ளி டவுன் 7-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பின்புற பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

அதாவது மழை வெள்ளத்துடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மலேரியா காய்ச்சல்

இந்த நிலையில் நேற்று மலவள்ளி புரசபை முன்பு மழை வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்களும், அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பரத் ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது அவர்கள் வீடுகளுக்குள் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் புகுந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கவில்லை. இதன்காரணமாக மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களால் அவர்கள் பாதிக்கப்படக்கூடும்.

கலெக்டரிடம் மனு

எனவே இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் புரசபை அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர்.


Next Story