மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவம்... காவல்துறை என்ன செய்கிறது..? - சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி


மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவம்... காவல்துறை என்ன செய்கிறது..? - சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
x

மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய 14 நாட்கள் தாமதம் ஏன் என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தரப்பில் சி.பி.ஐ. விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றும் இது தொடர்பாக எஸ்.ஐ.டி. விசாரணை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின்போது மத்திய அரசிடம், தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது:-

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா பகுதிகளிலும் நடைபெறுகின்றன என்பதில் எந்த மறுப்பும் இல்லை. மற்ற பகுதிகளிலும் நடக்கின்றன என்பதற்காக மணிப்பூரில் நடைபெறும் குற்றங்களை மன்னிக்க முடியாது. இப்போது மணிப்பூரை எப்படி கையாள்வது என்பதுதான் கேள்வி. இந்தியாவின் அனைத்து மகள்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறீர்களா? அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?

மணிப்பூர் சம்பவம் ஒரு நிர்பயா சம்பவம் போல அல்ல. இது கூட்டு பலாத்காரம். இந்த சம்பவம் நிகழ்ந்து 14 நாட்களுக்கு பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய 14 நாட்கள் தாமதம் ஏன்? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார்தான் அழைத்து சென்று அந்த கும்பலிடம் விட்டிருக்கின்றனர்.

மணிப்பூரில் வீடியோ வெளியான ஒரு சம்பவம் மட்டுமல்ல, இதுபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா?

மணிப்பூர் மாநிலத்தில் இன்னமும் அமைதி திரும்பாமல் இருப்பது அதிர்ச்சியை தருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உருவாக வேண்டும். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை வழங்குவோம். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தராமல் இருக்கின்றனர். அவை தொடர்பாகவும் நாம் விசாரித்தாக வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். மணிப்பூர் விவகாரம் தொடர்புடைய மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைத்தது.


Next Story