18 வயதுக்குட்பட்டோருக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரை விற்க தடை
மாநிலம் முழுவதும் மருந்து கடைகளில் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் விற்க தடை விதிக்க கர்நாடக அரசு புதிய சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு-
செல்போன்களுக்கு தடை
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து 5 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், பி.யூ.சி. முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர் தனியாக செல்போன் வாங்கி கொடுத்தனர்.
ஆனால் கொரோனா பரவல் முடிந்து பள்ளி, பி.யூ. கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகும் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. பலரும் செல்போன்களை, பள்ளி, கல்லூரிக்கு கொண்டு வர தொடங்கினர். இதனால் மாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதற தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கர்நாடக பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்போன் கொண்டு வர தடை விதித்தது. அதையும் மீறி செல்போன் எடுத்து வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் சோதனையிட்டு, செல்போன்களை பிடுங்கி பெற்றோரிடம் ஒப்படைத்து வந்தனர்.
மாணவிகளின் பைகளில் சிக்கிய ஆணுறை
இந்த சோதனையின் போது பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் புத்தகப்பைகளில் ஆணுறைகள், ஒயிட்னர், சிகரெட் பாக்கெட்டுகள், லைட்டர்கள் போன்ற பொருட்கள் சிக்கியது. குறிப்பாக பள்ளி மாணவிகள் பலரும் தங்களது பைகளில் கருத்தடை மாத்திரையும், ஆணுறை பாக்கெட்டுகளும் வைத்திருந்ததை பார்த்து ஆசிரிய-ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியது. மேலும் பெற்றோர்களை அழைத்து மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்கவும் அறிவுறுத்தியது.
18 வயதுக்குட்பட்டோருக்கு...
இந்த நிலையில் கர்நாடக அரசு 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மருந்து கடைகளில் ஆணுறை மற்றும் ஒயிட்னர், வலி நிவாரணி மாத்திரைகள் விற்க தடை விதிக்கவும் புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதுபற்றி தீவிர நடவடிக்கையில் சுகாதாரத்துறையுடன் இணைந்து இறங்கியுள்ளது. இதுகுறித்து கர்நாடக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பி.டி. கானாபுரா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய சட்டம் கொண்டுவர முடிவு
18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மருந்து கடைகளில் ஆணுறை, வலிநிவாரணி மருந்து, மாத்திரைகள், கருத்தடை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
மாநிலம் முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது மாணவர்களின் கைகளில் அதிகளவில் கிடைத்து வருகிறது. இதை தடுக்கவே புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.