பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசிய உமா பாரதி
மதுபானக்கடை மீது பாஜக மூத்த தலைவர் உமா பாரதி மாட்டுச்சாணம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறனர்.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உமா பாரதி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசி பிரபலமானவர். பாஜகவை சேர்ந்த உமா பாரதி மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி நிவாரி மாவட்டம் உர்ச்ஷா நகரில் உமா பாரதி தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, உர்ச்ஷா நகரில் உள்ள ஒரு மதுக்கடை மீது உமா பாரதி மாட்டுச்சாணத்தை வீசி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் இதேபோன்று நடந்த போராட்டத்தில் மதுபான கடை மீது உமா பாரதி கற்கலை வீசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்த போராட்டத்தின்போது, பாருங்கள் நான் மதுபான கடை மீது மாட்டுச்சாணத்தை வீசுகிறேனே தவிர கற்கலை அல்ல' என உமா பாரதி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.