வெறுப்பு அரசியல் வேண்டாம் - தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அறிவுரை
வெறுப்பு அரசியலை விடுத்து அன்பான அரசியலை ஒற்றுமையுடன் செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
நவாராய்ப்பூர்,
நடப்பு ஆண்டில் கர்நாடகா உள்ளிட்ட 9 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நவாராய்ப்பூர் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர், "கட்சி தொண்டர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களை மத்திய அரசு குறி வைக்கிறது. விவசாயிகள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும். காங்கிரஸ் கட்சியினர் வெறுப்பு அரசியலை விடுத்து அன்பான அரசியலை ஒற்றுமையுடன் செய்ய வேண்டும்.
இப்போது, நமக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது, நாங்கள் (எதிர்கட்சிகள்) ஒன்றிணைவோம் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் சித்தாந்தத்தை (பாஜக) எதிர்க்கும் மக்களும் ஒற்றுமையாக போராட வேண்டும். அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் உள்ளன. காங்கிரசிடம் தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.