இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசு உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி வேண்டுகோள்
இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசு உதவ வேண்டும் என்று பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழைக்கு இதுவரை மாநிலத்தில் 260 பேர் பலியாகி உள்ளனர். மழைக்காலத்தில் 165 நிலச்சரிவுகள் மற்றும் 72 திடீர் வெள்ளப்பெருக்குகள் பதிவாகியுள்ளன. ஜூலை 14 மற்றும் 15-ந்தேதிகளில் குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது.
இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு கனமழை காரணமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக நேற்று இமாசலபிரதேசம் வந்தார்.
இமாசலபிரதேசம் குலுவில் உள்ள பூந்தர் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரியங்கா காந்தி உள்ளூர் விவசாயிகளுடன் ஆப்பிள் உற்பத்தி மற்றும் விலை விவரம் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து குலு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பிரியங்கா காந்தி பார்வையிட்டார். மணாலியில் உள்ள ஆலு மைதானத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா காந்தி, "மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளதா அல்லது பா.ஜனதா ஆட்சி உள்ளதா என்பதை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பிரியங்கா காந்தியுடன் முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இருந்தார்.