அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி? - கணவர் ராபர்ட் வதேரா சூசகம்
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளாரா என்பது குறித்து அவரது கணவர் ராபர்ட் வதேரா சூசகமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு செல்ல முழு தகுதியுடையவர் என அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "பிரியங்கா காந்தி கண்டிப்பாக மக்களவையில் இருக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. அவர் நாடாளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார். அங்கிருக்க தகுதியானவர். காங்கிரஸ் கட்சி அவரை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன்" என கூறினார்.
அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை ராபர்ட் வதேரா சூசகமாக தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதனிடையே ராபர்ட் வதேரா தனது பேட்டியில், நாடாளுமன்றத்தில் பேசும் போது தொழில் அதிபர் கவுதம் அதானியுடன் தனது பெயரை இணைத்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதை கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் என் பெயருக்காக போராட நான் பேசுவேன், ஏனென்றால் அவர்கள் ஏதாவது சொன்னால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
நான் அதானியுடன் செய்ததை எனக்கு காட்டுங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுகிறேன். ஏதேனும் தவறு நடந்தால், நான் எதிர்கொள்வேன். இல்லையென்றால், அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
குறைகளை கேட்கவில்லை
அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது. அதுபற்றி ராகுல் காந்தி கேட்டதற்கு ஏன் பதில் இல்லை.
மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி என்ற முறையில் இரானி அவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க ஒருபோதும் செல்லவில்லை.
மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி பேசாமல், நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத என்னைப்பற்றி ஒருவித எதிர்மறையான விஷயத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பேசுகிறார் என்று அவர் கூறினார்.