தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
குந்தாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடுப்பி-
குந்தாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொழிலாளி
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா டவுன் போஸ்ட் ஆபீஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா சேரிகர் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராகவேந்திரா பெங்களூருவில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவர் ஓட்டல் அருகே குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில், ஓட்டலில் கொடுக்கும் சம்பள தொகையை வைத்து ராகவேந்திராவால் குடும்பம் நடத்த முடியவில்லை.
இதனால், சொந்த ஊருக்கே செல்ல அவர் முடிவு செய்தார். அதன்படி ராகவேந்திரா குடும்பத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குந்தாப்புரா வந்தார். அங்கு மளிகை கடை வைத்து அவர் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் ராகவேந்திராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
கத்திக்குத்து
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு அப்பகுதியில் ராகவேந்திரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் அவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் ராகவேந்திரா சரிந்து கீழே விழுந்தார்.
அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குந்தாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மணிப்பால் தனியார் மருத்துவமனையில் ராகவேந்திரா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வலைவீச்சு
இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராகவேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குந்தாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களையும் தேடி வருகிறார்கள்.