சிறையில் சித்ரவதைக்கு பயந்தே டெல்லி மந்திரிக்கு கைதிகள் மசாஜ்; விசாரணை குழு அறிக்கை
டெல்லி சிறையில் மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு, சஸ்பெண்டான சிறை சூப்பிரெண்டு, வார்டன்கள், பிற பணியாளர்கள் சேவை செய்துள்ளனர் என விசாரணை குழு அறிக்கை தெரிவிக்கின்றது.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மந்திரியான சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து, கடந்த மே மாதம் 30-ந்தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது.
இதனால், அவர் வகித்து வந்த சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்கள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இன்றி மந்திரியாக ஜெயின் நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது.
சத்யேந்திர ஜெயின் ஒரு மந்திரி என்றும், அதனை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்தி கொள்கிறார் என கூறியது. தவிர, டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.
இந்நிலையில், டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் பலாத்கார வழக்கின் கைதி என்று சிறை வட்டாரம் தெரிவித்தது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் சார்பில் இந்த விவகாரம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றி டெல்லி அரசின் உள்துறை, சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர்.
அதில், டெல்லி திகார் சிறையில் சித்ரவதைக்கு பயந்தே சக கைதிகள் மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் அளித்து உள்ளனர் என விசாரணை குழு அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன்படி, சிறப்பு சேவை செய்யும்படி குறைந்தது சிறையின் 5 கைதிகளுக்கு சிறை நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் அன்பு, பாசம் அடிப்படையிலேயோ அல்லது விரும்பியோ இந்த சேவையை மந்திரிக்கு அளிக்கவில்லை என்றும், கீழ்படியாவிட்டால், சிறையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பயந்தே உத்தரவுக்கு அடிபணிந்துள்ளனர்.
சஸ்பெண்டான சிறை சூப்பிரெண்டு அஜித் குமார், வார்டன்கள், பிற பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறை அதிகாரிகள் டெல்லி திகார் சிறையில் மந்திரிக்கு சேவை செய்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கின்றது.