பிரதமர் மோடியின் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை பேச்சு; சிவராஜ் சிங் சவுகானாக இருக்கும்: கமல்நாத் கிண்டல்
ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை என பிரதமர் மோடி எங்களை கூறவில்லை என்றும் அது சிவராஜ் சிங் சவுகானாக இருக்கும் என்றும் கமல்நாத் கிண்டலாக கூறியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் போபால் நகரில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பா.ஜ.க. தொண்டர்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். வருங்காலத்தில் பொது சிவில் சட்டம் சாத்தியம் ஏற்படுவதற்கான வழிகளை அரசியல் அமைப்பு கொண்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டும் இதனை அமல்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது.எனினும், பொது சிவில் சட்ட விவகாரம் ஆனது, சிலரால் தவறாக வழிநடத்த பயன்படுத்தப்பட்டு வருவதுடன், முஸ்லிம் சமூகத்தினரை தூண்டி விட்டும் வருகின்றனர் என பிரதமர் மோடி பேசினார்.
பொது சிவில் சட்டம் என்ற பெயரால் சிலர் இன்று தூண்டி விடப்படுகின்றனர். ஒரு நாடு இரு சட்டங்களின்படி எப்படி செயல்பட முடியும்? அரசியலமைப்பும் சம உரிமைகளை பற்றி பேசி வருகின்றன. ஆனால், இந்த மக்கள் (எதிர்க்கட்சிகள்) வாக்கு வங்கி அரசியலை வைத்து விளையாடி கொண்டு இருக்கின்றனர்.
பா.ஜ.க. ஒருபோதும் திருப்திப்படுத்தும் அரசியலை செய்யாது மற்றும் வாக்கு வங்கி அரசியலிலும் ஈடுபடாது என முடிவு செய்து உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
அவரது இந்த பேச்சு பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்து அவர் இன்று பேசும்போது, பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் பெயரை கூறவில்லை. அவர், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை சுட்டி காட்டி பேசியிருக்க கூடும் என கிண்டலாக கூறியுள்ளார்.
எனினும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயல் உறுப்பினரான ஆரிப் மசூத் கூறும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் வகுத்த அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி பதவி பிரமாணம் எடுத்து உள்ளார்.
நாட்டின் அனைத்து பிரிவினரும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். அவர்கள் அதனை மாற்ற அனுமதிக்கமாட்டார்கள் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறும்போது, பொது சிவில் சட்டம் பற்றி கவனத்தில் கொள்ளும்போது, பிரதமர் நேரு முன்பு கூறும்போது, பொது சிவில் சட்டம் விரும்பத்தக்க விசயம் என கூறினார். ஆனால், ஒவ்வொருவரையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு சமூகத்தினரையும் நீங்கள் மறந்து விட முடியாது என்று கூறியுள்ளார்.