பிரதமர் மோடி இன்று முதல் 3 நாள் ஆதரவு திரட்டுகிறார்


பிரதமர் மோடி இன்று முதல் 3 நாள் ஆதரவு திரட்டுகிறார்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெங்களூரு:-

தலைவர்கள் பிரசாரம்

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பிரதமர் மோடி இதுவரை 4 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். இந்த 4 நாட்களில் 15 பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் விஜயாப்புரா, பீதர், கோலார், மண்டியா, ராமநகர், பெங்களூரு, கொப்பல், பெலகாவி, சித்ரதுர்கா, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு

பகுதிகளில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தார்.

அவர் நேற்று ஓய்வு எடுத்து கொண்டார். இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி நிதின் கட்காரி, மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர்கள்

உள்துறை மந்திரி அமித்ஷா கலபுரகி மாவட்டத்தில் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பிரியங்கா காந்தி கொப்பல், ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். தான் போட்டியிடும் வருணா தொகுதியில் சித்தராமையா திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

நடிகர் சிவராஜ்குமார், அவரது மனைவி கீதா சிவராஜ்குமார், நடிகை ரம்யா, நடிகர்கள் சாது கோகிலா, துனியா விஜய் ஆகியோரும் நேற்று வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அவர்கள் திறந்த வாகனத்தில் சாலையில் ஊர்வலமாக வந்து ஆதரவு திரட்டினர். அதே போல் மல்லிகார்ஜுன கார்கே நேற்று யாதகிரி, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று துமகூரு மாவட்டம் திப்தூரில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அண்ணாமலை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் பிரசாரம் மேற்கொண்டார். மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பெலகாவியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அதே போல் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் நேற்று பெலகாவியில் பா.ஜனதாவை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.

முன்னாள் மந்திரி ஈசுவரப்பா யாதகிரி மாவட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். உள்துறை மந்திரி அமித்ஷா கலபுரகி மாவட்டத்தில் ஜேவர்கி, அப்சல்புரா ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பிரதமர் மோடி

இந்த நிலையில் பிரதமர் மோடி கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் தொடர்ந்து 3 நாட்கள் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கிறார். குறிப்பாக பெங்களூருவில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story