பெங்களூரு-தார்வார் இடையே இன்று முதல் வந்தேபாரத் ரெயில் சேவை


பெங்களூரு-தார்வார் இடையே இன்று முதல் வந்தேபாரத் ரெயில் சேவை
x

தார்வார்-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

தார்வார்-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி

கர்நாடகத்தில் சென்னை-மைசூரு இடையே அதிவேக வந்தேபாரத் ரெயில் சேவை கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் சென்னை-மைசூரு ஆகிய இரு நகரங்களுக்கு இடையேயான 500 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 6½ மணி நேரத்தில் கடந்துவிடும். இது தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரெயில் ஆகும்.

இந்த நிலையில் கர்நாடகத்திற்குள் ஓடும் வகையில் பெங்களூரு-தார்வார் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி அறிவித்து இருந்தார்.

சோதனை ஓட்டம்

அதன்படி, பெங்களூரு-தார்வார் இடையே வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிலையில் பெங்களூரு-தார்வார் இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா 27-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று மத்திய ரெயில்வே துறை அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு-தார்வார் இடையே வந்தேபாரத் ரெயில்(வண்டி எண்:- 20661/20662) சேவை தொடக்க விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.15 மணிக்கு தார்வார் ரெயில் நிலையத்தில் நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டு பச்சை கொடி அசைத்து பெங்களூரு-தார்வார் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி கனிம வளத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

நீண்ட நாள் கோரிக்கை

இந்த வந்தேபாரத் ரெயில் மூலம் வட கர்நாடக மக்கள் தலைநகர் பெங்களூருவில் இருந்து விரைந்து செல்ல முடியும். இத்தகைய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்பது வட கர்நாடக மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை ஆகும். அவர்களின் இந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்படுகிறது.

8 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும். செவ்வாய்க்கிழமைகளில் இந்த ரெயில் இயங்காது. தினமும் காலை 5.45 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். தார்வாருக்கு மதியம் 12.40 மணிக்கு சென்றடையும். அதாவது பயண நேரம் சுமார் 7 மணி நேரம் ஆகும். பிறகு அந்த ரெயில் மதியம் 1.15 மணிக்கு தார்வாரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

70 கிலோ மீட்டர் வேகம்

இந்த ரெயில் யஷ்வந்தபுரம், தாவணகெரே, உப்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அதாவது, காலை 5.45 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 5.55 மணிக்கு யஷ்வந்தபுரத்துக்கு செல்லும். 2 நிமிடங்கள் அங்கு நிற்கும். பின்னர் காலை 5.57 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 9.15 மணிக்கு தாவணகெரேவை சென்றடையும். 2 நிமிடங்கள் அங்கு நின்ற பிறகு காலை 9.17 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தை சென்றடையும். அங்கு 5 நிமிடங்கள் அந்த ரெயில் நிற்கும். பிறகு காலை 11.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு தார்வார் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக தார்வாரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் உப்பள்ளி ரெயில் நிலையத்தை மதியம் 1.35 மணிக்கு சென்றடையும். அங்கு 5 நிமிடங்கள் நிற்கு இந்த ரெயில் பின்னர் மதியம் 1.40 மணிக்கு அங்கிருந்து புறப்படும். அதையடுத்து 3.38 மணிக்கு தாவணகெரேவை சென்றடையும் இந்த ரெயில் அங்கு 2 நிமிடங்கள் நிற்கும். பின்னர் தாவணகெரே ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் மதியம் 3.40 மணிக்கு தனது பயணத்தை தொடங்கும் இந்த ரெயில் இரவு 7.13 மணிக்கு யஷ்வந்தரம் ரெயில் நிலையத்தை வந்தடையும். அங்கு 2 நிமிடங்கள் நிற்கும் இந்த ரெயில் இரவு 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடையும்.

இரு நகரங்களுக்கு இடையே 489 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் சராசரியாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கி கடக்கும். இந்த ரெயிலில் 530 இருக்கைகள் உள்ளன. இது கர்நாடக மாநிலத்திற்குள் தொடங்கப்படும் முதல் வந்தேபாரத் ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூருவில் இருந்து தார்வாருக்கு அதிவேகமாக செல்லக்கூடிய பெலகாவி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. இது காலை 9.12 மணிக்கு யஷ்வந்தப்புரத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.28 மணிக்கு தார்வாரை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story