ஆஸ்கர் விருது வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்கான விருதை டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படக் குழுவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "எதிர்பார்த்ததுதான். நாட்டு நாட்டு பாடலில் புகழ் உலகளாவியது. பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாரட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' படக்குழுவை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்துரைக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.