'மணிப்பூர் பற்றி எரிகிறது; பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்' - மல்லிகார்ஜுன் கார்கே


மணிப்பூர் பற்றி எரிகிறது; பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் - மல்லிகார்ஜுன் கார்கே
x

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும் ‘இந்தியா’ உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

புதுடெல்லி,

பா.ஜ.க. எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்ட நாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது. இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததே இல்லை.

அவர்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு, கிழக்கிந்திய கம்பெனி ஆகிய பெயர்களிலும் 'இந்தியா' உள்ளது. மக்களை தவறாக வழிநடத்துவதற்கு நாட்டின் பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை" என்று கூறினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய இந்த நான்கு நாட்களில் பல பிரதிநிதிகள் விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இது முதல் முறை இல்லை. 2016-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது விவாதம் நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இப்போது மணிப்பூர் பற்றி எரிகிறது. நாங்கள் அதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இது குறித்து பேச பிரதமர் ஏன் இங்கு வரவில்லை. மணிப்பூர் விவகாரத்திற்கு பதிலாக பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்" என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.


Next Story