கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களை தங்கத் தகடுகளால் மூட பூசாரிகள் எதிர்ப்பு
கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களை தங்கத் தகடுகளால் மூட பூசாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் அமைந்திருக்கிறது.
இதன் கருவறை உள்பகுதி 4 சுவர்களையும் தங்கத் தகடுகளால் மூட காணிக்கையாக தங்கம் வழங்க மராட்டியத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் முன்வந்தார். அதற்கு மாநில அரசின் அனுமதி பெற்று, பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி ஒப்புதல் அளித்தது.
அதையடுத்து, கருவறை உள்சுவர்களை தங்கத் தகடுகளால் மூடும் பணி தொடங்கியிருக்கிறது. அதற்கு இக்கோவிலின் பூசாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்கத் தகடுகளால் மூடுவதற்கு பெரிய துளையிடும் கருவிகளைக் கொண்டு கருவறைச் சுவர் சேதப்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டு கால பாரம்பரியம் மீறப்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். அதேநேரம், தங்கத் தகடுகளால் மூடும் பணிக்கு சில மூத்த பூசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜயும், கருவறை உள்அமைப்பை மாற்றாமல், பாரம்பரியத்தை பின்பற்றியே தங்கத் தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதற்காக மாநில அரசிடமும் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.