தைவான் விவகாரம்: போருக்குத் தயாராக இருங்கள்; ராணுவத்துக்கு சீன அதிபர் போட்ட திடீர் உத்தரவு...!


தைவான் விவகாரம்: போருக்குத் தயாராக இருங்கள்;  ராணுவத்துக்கு சீன அதிபர் போட்ட திடீர் உத்தரவு...!
x

ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஜிங்,

தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். தைவான் நாடு தம்மை உண்மையான சீனா என்கிறது. ஆனால் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சர்வதேச விவகாரங்களில் 1970களில் கூட தைவான் தான் உண்மையான சீனா என அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிந்தைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறின.

சீனாவைப் பொறுத்தவரை ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது. இதில் தைவானும் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் உலக நாடுகள் இதனை ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் தைவானை முன்வைத்து சர்வதேச அரசியலில் குழப்பம் நிலவுகிறது.

தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானை ஆக்கிரமிக்க சீனா முயலுமானால், அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் என அது அறிவித்துள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்குப் பிறகு சீனா - தைவான் உறவு மேலும் சிக்கலாகி உள்ளது.

தைவானை தங்களுக்கு எதிராக திருப்பி அதன்மூலம் அச்சுறுத்தல் விடுக்கும் போக்கிற்கு முடிவு கட்ட சீன அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீன அதிபராக ஜி ஜின்பிங் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடருவார் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கூட்டு ராணுவ தலைமையகம் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் ஜி ஜின்பிங் ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று இந்த உத்தரவை பிறப்பித்ததாக ஆஸ்திரேலியாவின் 'ஸ்கை நியூஸ்' தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் முன் உள்ள பல்வேறு சவால்களை முறியடிக்கவும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தி இருப்பதாகவும் 'ஸ்கை நியூஸ்' தெரிவித்துள்ளது.

இதேபோல், சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ பயிற்சியை ஒருங்கிணைந்த முறையில் வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போருக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிபர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. போர் புரிவதற்கும், வெற்றியை உறுதி செய்வதற்கும் ஏற்ற வகையில் ராணுவம் தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன அரசின் ஊடகமான ஜின்ஜூவாவும் செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story