செங்கோட்டை தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு - ஜனாதிபதி நிராகரித்தார்


செங்கோட்டை தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு - ஜனாதிபதி நிராகரித்தார்
x

செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்தார்.

புதுடெல்லி,

கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 2005-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரீப் என்ற அஷ்பாக்கை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 2005-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அஷ்பாக்கிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக அஷ்பாக் உள்ளிட்ட 4 பயங்கரவாதிகள் கடந்த 1999-ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து, ஶ்ரீநகரில் தங்கியிருந்து செங்கோட்டை தாக்குதல் தொடர்பான திட்டங்களை தீட்டியதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் மற்ற 3 பயங்கரவாதிகள் அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அஷ்பாக், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆரிப் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து, அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த நிலையில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அஷ்பாக் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த செங்கோட்டை தாக்குதல் வழக்கில் குற்றவாளி அஷ்பாக்கிற்கு மரண தண்டனை உறுதியாகியுள்ளது. இருப்பினும் அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ், நீண்ட கால தாமதத்தின் அடிப்படையில் தனது தண்டனையை குறைக்கக் கோரி மரண தண்டனை கைதி சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story