6 நாள் பயணமாக செர்பியா, சூரினாமுக்கு சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரினாம் மற்றும் செர்பியாவுக்கு ஆறு நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார்
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சூரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டு சென்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரபா குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் ஜூன் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சூரினாம், செர்பியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது சூரினாம் மற்றும் செர்பியா நாடுகளின் அதிபர்களை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 ஆம் தேதி வரை தென் அமெரிக்க நாடான சூரினாமுக்கு பயணம் செய்கிறார். சூரினாமில் இருந்து அவர் ஜூன் 7 முதல் 9 ஆம் தேதி வரை தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஐரோப்பாவில் உள்ள செர்பியாவுக்குச் செல்கிறார்.
சூரினாம் அதிபர் சான் சந்தோகி அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். சூரினாமுக்கு இந்தியர்கள் வருகையின் 150-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்வதால் இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது