'சனாதனத்தை எதிர்ப்பவர்களின் அரசியல் முடிவுக்கு வரும்' - மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான்
சனாதன தர்மத்துக்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது என்று சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
போபால்,
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.
மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கும்போது, சனாதனம் குறித்த கருத்துகளுக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்தவரான மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான், சனாதனத்தை எதிர்ப்பவர்களின் அரசியல் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களின் அரசியல் நிச்சயம் முடிவுக்கு வருவது உறுதி. சனாதன தர்மத்துக்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது. அது எப்போதும் நிலைத்திருக்கும்" என்றார். முன்னதாக மகாபாரதத்தில் இருந்து 'யதா யதா ஹி தர்மஸ்ய' என்ற ஸ்லோகத்தையும் அவர் வாசித்தார்.