அரசியல் ஒலி பெருக்கி
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் சொல்வது என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
காங்கிரஸ் கட்சியினருக்கு பயம் ஏன்?
தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடகத்திற்கு வந்துள்ளனர். இது வழக்கமானது தான். தேர்தல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இது நடந்திருக்கிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் பயம் ஏன்?. தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். காங்கிரசார் எதற்காக பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.
- பசவராஜ் பொம்மை, மாநில முதல்-மந்திரி.
சித்தராமையாவுக்கு தோல்வி பயம்
வருணா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மட்டுமே செல்வேன், எக்காரணத்தை கொண்டும் பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி இருக்கிறார். இதுபோன்று அவர் பேசி வருவதால் தான் தோல்வி அடைகிறார். வருணாவில் சித்தராமையாவுக்கு தோல்வி பயம் உள்ளது. வருணாவில் வெற்றி பெற்று விடுவோம் என்றால், கோலாரில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் சித்தராமையா சீட் கேட்பது ஏன்?.
- சீனிவாச பிரசாத், பா.ஜனதா எம்.பி.
ஜனதாதளம்(எஸ்) கட்சியை அழிக்க திட்டம்
தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை அழிப்பதற்காக திட்டமிடுகிறார்கள். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஜனதாதளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார். ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
-எச்.டி.ரேவண்ணா, ஜனதாதளம்(எஸ்) முன்னாள் மந்திரி.
ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வராது
ஜனதாதளம் (எஸ்) கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும், தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவோம் என்று குமாரசாமி கூறி வருகிறார். ஜனதாதளம் (எஸ்) கட்சி தனித்து ஆட்சிக்கு வராது. அதற்கான சாத்தியமே இல்லை. கூட்டணி ஆட்சியில் 2 முறை குமாரசாமி முதல்-மந்திரி ஆகி உள்ளார். இந்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. அதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
- ராமலிங்கரெட்டி, காங்கிரஸ் செயல் தலைவர்.
பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது
பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மத்தியிலும், மாநிலத்திலும் செய்து வரும் வளர்ச்சி பணிகள், ஆட்சி நிர்வாகத்தை பார்த்து நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்ய சம்மதித்துள்ளார். நடிகர் சுதீப் பிரசாரத்தின் மூலமாக பா.ஜனதாவுக்கு பெரிய பலம் கிடைக்கும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.
- சுதாகர், சுகாதாரத்துறை மந்திரி.