துரோகிகளை அரசியல் ரீதியாக படுகொலை செய்வோம்: உத்தவ் தாக்கரே ஆவேச பேச்சு
ராமர் என்பவர் தனிப்பட்ட ஒரு கட்சியின் சொத்து இல்லை. பா.ஜனதாவிடம் இருந்து விடுதலை பெற்ற ஸ்ரீ ராமனை நாம் உருவாக்கவேண்டும் என உத்தவ் தாக்கரே கூறினார்.
நாசிக்:
மராட்டியத்தில் சிவசேனா 2 ஆக உடைந்த நிலையில், பாலாசாகேப் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி மாநாடு நேற்று நாசிக்கில் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
வானர மன்னன் வாலியை ராமர் ஏன் கொன்றார் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நமது சிவசேனாவை அபகரித்த வாலியையும் நாம் அரசியல் ரீதியாக கொல்ல வேண்டும். சிவசேனாவுடன் தப்பி சென்ற துரோகிகளை அரசியல் ரீதியாக படுகொலை செய்ய தொண்டர்களாகிய நீங்கள் சபதம் எடுக்க வேண்டும். சிவசேனாவை அபகரித்தவர்கள், காவி கொடியை காட்டி ஏமாற்றியவர்கள் மற்றும் அவர்களின் எஜமானர்கள் அனைவரையும் நாங்கள் நிச்சயமாக அரசியல் ரீதியாக படுகொலை செய்வோம். ராமரின் முகமூடிகளை அணிந்த ராவணன் முகத்திரையை எங்களது கட்சி தொண்டர்கள் கிழிப்பார்கள்.
ராமர் என்பவர் தனிப்பட்ட ஒரு கட்சியின் சொத்து இல்லை. பா.ஜனதாவிடம் இருந்து விடுதலை பெற்ற ஸ்ரீ ராமனை நாம் உருவாக்கவேண்டும். இ்ங்கு கூடியிருக்கும் சிவசேனா தொண்டர்கள் எனது செல்வம். நான் இந்த கட்சியையும், இந்த சிவசேனாவினரையும் வாரிசுகளாக பெற்றுள்ளேன். நான் அவர்களை திருடவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வருவதற்காக சிவசேனா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. ஆனால் தற்போது சிவசேனா தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. நீங்கள் (பிரதமர் மோடி) இந்த நிலையை அடைய உங்களுக்கு உதவிய சிவசேனா தொண்டர்களை மறந்துவிட்டீர்கள்.
கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று காங்கிரசை பார்த்து கேட்கிறீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். முதல் 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றினார். அயோத்திக்கு அவர் ஒருமுறை கூட செல்லவில்லை.
உங்களின்(பா.ஜனதாவின்) மோசடிகளின் ஆதாரமாக இருக்கும் 'பி.எம்-கேர்' நிதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உங்களுக்கு எதிராக விசாரணை நடத்தி உங்களை சிறைக்கு அனுப்புவோம்.
நாங்கள் 'காங்கிரஸ் வாசி' ஆகிவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். 30 ஆண்டுகள் பா.ஜனதாவுடன் கழித்த பிறகும் நாங்கள் 'பா.ஜனதா வாசி' ஆகவில்லை. பிறகு நாங்கள் எப்படி 'காங்கிரஸ் வாசி' ஆக முடியும்?. சியாம பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் இணைந்து ஆட்சி அமைத்தது குறித்தும் பா.ஜனதா பேச வேண்டும். சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்கவில்லை, அவர்கள் இப்போது நாட்டின் சுதந்திரத்தை பறிக்க முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.