சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது - கங்கனா ரனாவத்


சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது - கங்கனா ரனாவத்
x

சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யா சிங்கை சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கங்கனா ரனாவத் தோற்கடித்தார்.

சமீபத்தில் சி.ஐ.எஸ்.எப் பெண் காவலர் குல்வீந்தர் கவுர், சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்தை கண்டித்து அவரை அறைந்ததாக குல்விந்தர் கவுர் கூறியிருந்தார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"எனது தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். எனவே அரசியல் வாய்ப்புகள் என் குடும்பத்தில் இருந்து எப்போதும் வெகு தொலைவில் இருந்ததில்லை. என்னுடைய முதல் படமான 'கேங்க்ஸ்டர்' படத்திற்குப் பிறகே எனக்கு அரசியல் வாய்ப்புகள் வரத் தொடங்கின. எனது தந்தைக்கும், சகோதரிக்கும் கூட அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

அரசியலில் சேர என்னை அணுகியது இது முதல் முறையல்ல. எனக்கு இதில் ஆர்வம் இல்லையென்றால், நான் இவ்வளவு சிரமப்பட வேண்டியது இல்லை. இது ஒரு கடினமான வாழ்க்கை, சினிமாவைப் போன்றது அல்ல. ஒரு திரைப்பட நடிகராக படப்பிடிப்புகளுக்கும், திரையரங்குகளுக்கும் சென்று நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். நடிகர்களின் வாழ்க்கை மென்மையானது.

இதன் காரணமாகவே அரசியல் வாழ்க்கையை புரிந்து கொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்தது. இந்த வாழ்க்கை மிகவும் கடினமானது. மருத்துவர்களைப் போலவே, பிரச்சினைகள் உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளைப் பார்க்க வருவார்கள். படம் பார்க்கப் போகும்போது நிம்மதியான மனநிலையுடன் செல்லலாம். ஆனால் அரசியல் அப்படிப்பட்டது அல்ல. பிடித்ததை செய்பவர்கள் புத்திசாலிகள் என்றும், தேவையானதை செய்பவர்கள் மேதைகள் என்றும் எனது குரு ஜக்கி வாசுதேவ் கூறியிருக்கிறார்."

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.


Next Story