கர்நாடகாவில் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்; இளைஞர்கள் மீது போலீசார் தடியடி
கர்நாடகாவில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தார்வாட்,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் தார்வாட் பகுதியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற இளைஞர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தார்வாட்டில் உள்ள கலா பவனில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கூடுதல் துணை கமிஷனரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் பேருந்து மீது கற்களை வீசினர். பேருந்து சேதமடைந்தது.
இதையடுத்து அவர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர், பலர் கலைந்து சென்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோகாக், பெலகாவி போன்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. கானாபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அஞ்சலி நிம்பல்கரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.