போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்; எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மூடிகெரேவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதிக்குட்பட்ட மல்லந்துர் போலீஸ் நிலையத்தில் ரவி என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு மண்டல ஐ.ஜி. உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஆதர்ஸ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் அமர்த்தப்பட்டார். அவரை சந்தித்த, மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.பி.குமாரசாமி, அவரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அவரை தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
இதையடுத்து ரவியை மீண்டும் அங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் அமர்த்தவும், அவரது இடமாற்றத்தை ரத்து செய்யவும் கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.க்கு எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பினார்.
மேலும், சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தை ரத்து செய்யாவிட்டால் பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.