காஷ்மீர்: டிரோன் மூலம் ரூ.5 லட்சம் ரொக்கம், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வீச்சு


காஷ்மீர்: டிரோன் மூலம் ரூ.5 லட்சம் ரொக்கம், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வீச்சு
x

காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே டிரோன் மூலம் ரூ.5 லட்சம் ரொக்கம், துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் போடப்பட்டன. அவற்றை போலீசார் கைப்பற்றியதால் நாசவேலை தவிர்க்கப்பட்டது.

ஜம்மு,

காஷ்மீரில் சம்பா மாவட்டம் ராம்கார் செக்டாரில் நேற்று காலை 6 மணியளவில், பறந்து வந்த ஒரு டிரோன், ஒரு பையை கீழே போட்டது. அதை பார்த்த கிராம மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் வந்தனர். பையை திறந்து பார்த்தபோது, உள்ளே இந்திய ரொக்கப்பணமும், ஆயுதங்களும் இருந்தன.

500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.5 லட்சம் இருந்தது. 2 சீன கைத்துப்பாக்கிகள், 60 ரவுண்டு தோட்டாக்களுடன் 4 தோட்டா உறைகள், இணைக்கப்படாத 2 வெடிகுண்டுகள், ஒரு டெட்டனேட்டர், 2 பேட்டரிகள் ஆகியவை இருந்தன.

அனைத்து பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். அடியில் உருக்கு தகரம் கொண்ட மரப்பெட்டியில் அந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மர்மப்பை கைப்பற்ற இடம், சர்வதேச எல்லையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் அந்த பொருட்கள் போடப்பட்டு உள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மகாஜன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இது எல்லை தாண்டிய டிரோன் வீச்சு சம்பவம். இதுபற்றி விசாரித்து வருகிறோம். இந்த பொருட்கள் ஏதேனும் நாசவேலைக்காக போடப்பட்டு இருக்கலாம். அவற்றை நாங்கள் கைப்பற்றியதால், நாசவேலை தவிர்க்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் பரிசு அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, எல்லை பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.


Next Story