பிரபல ஹேக்கர் ஸ்ரீகியின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை
பிட்காயின் மோசடி விவகாரத்தில் பிரபல ஹேக்கர் ஸ்ரீயின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
பிட்காயின் மோசடி விவகாரத்தில் பிரபல ஹேக்கர் ஸ்ரீயின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
பிட்காயின் மோசடி
கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது பிட்காயின் மோசடி விவகாரம் விசுவரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல ஹேக்கர் ஸ்ரீகி என்ற ஸ்ரீகிருணாவை போலீசார் கைது செய்தனர். இவர் கர்நாடக அரசின் இணையத்தை முடக்கி பணமோசடியில் ஈடுபட்டார். இதேபோல் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கி, அதில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றினார். ஜாமீனில் வெளிவந்த அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின் மோசடி குறித்து சி.ஐ.டி. போலீசார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஹேக்கர் ஸ்ரீகியை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 இடங்களில்...
விசாரணையின்போது பிட்காயின் முறைகேட்டில் பா.ஜனதா பிரமுகர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்ரீகி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசாரணை நடத்திய போலீசாரை, ஸ்ரீகி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு விசாரணை குழு, பெங்களூருவில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பிரசித், ஸ்ரீகிருஷ்ணா, சுனிஷ் ஆகியோருக்கு சொந்தமான சதாசிவாநகர், ஜெயநகர் உள்பட 4 இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.
நேரில் ஆஜராக விலக்கு
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின்போது சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களில் குளறுபடி செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் பூஜாரி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை தனி நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடா தலைமையில் நடைபெற்றது.
அப்போது பிட்காயின் மோசடி விவகாரத்தில் ஹேக்கர் ஸ்ரீகியின் மடிக்கணினி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் விசாரணையை நிறுத்த கூடாது எனவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் பூஜாரி கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிட்காயின் மோசடி வழக்கில் ஸ்ரீகி, சுனிஷ், ஹேமந்த் ஆகியோர் மறு உத்தரவு வரும் வரை நேரில் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என கூறி விலக்கு அளித்தார். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.