பொதுமக்களை மிரட்டுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்க உத்தரவு- போலீஸ் கமிஷனர் தயானந்த் அதிரடி
பொதுமக்களை மிரட்டுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்க போலீசாருக்கு என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெங்களூரு:-
ரவுடிகள் தொடர் கொலை
பெங்களூருவில் ரவுடிகள் கொலை செய்யப்படுவதும், சாலைகளில் செல்லும் பொதுமக்களை தாக்குவது, மிரட்டி பணம் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒயிட்பீல்டு, வர்த்தூரில் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாதால் காரில் சென்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.
அத்துடன் நகரில் சாலைகளில் ஆயுதங் களுடன் சுற்றித் திரிவது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் விதமாக சில கும்பல்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களுக்கு கடிவாளம் போட போலீஸ் கமிஷனர் தயானந்த் முன்வந்துள்ளார்.
ரவுடி பட்டியலில் சேர்க்க உத்தரவு
இதையடுத்து போலீஸ் கமிஷனர் தயானந்த், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, துணை போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒழிப்பது, பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கும்பல்கள் மீது எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும்படி இன்ஸ்பெக்டர்களுக்கு, போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், எதிர்கோஷ்டிகள் இடையே மோதல் உருவாகி கொலை சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், சாலைகளில் நின்றபடி பொதுமக்களுடன் சண்டை போட்டு மிரட்டுவது, தாக்குவது, பணம் பறிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்கும்படியும், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு தயானந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.