கைவினை பொருட்கள்தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் - மத்திய மந்திரி ஜெயசங்கர்


கைவினை பொருட்கள்தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் -  மத்திய மந்திரி ஜெயசங்கர்
x

கைவினைப்பொருட்கள் தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் கூறினார்.

தொடக்க விழா

டெல்லியில் விஸ்வகர்மா திட்டத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் தாகூர் தியேட்டர் அரங்கில் மாநில அளவிலான விஸ்வகர்மா திட்ட தொடக்க விழா நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கலாசாரத்தின் அடையாளம்

மரபுவழி வந்த கைவினைப்பொருட்கள் தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம். இந்த திட்டத்தின் கீழ், பாரம்பரிய கைவினை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, முதல் கட்டமாக ரூ.1 லட்சமும், இரண்டாம் கட்டத்தில் ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.3 லட்சம் எந்த வித அடமானமும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்கள், கருவிகள் ஆகியவை வழங்கப்படும். மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில், திறன் பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், கைவினை தயாரிப்புகளை வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் மட்டுமின்றி சர்வதேச வணிக சங்கிலியுடன் இணைப்பதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் 30 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இதற்காக ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அடையாள அட்டை

இத்திட்டத்திற்கான முன்பதிவு ஆதார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் ஆன்லைன் மூலம் செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு, பி.எம் விஸ்வகர்மா அடையாள அட்டை, மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் சசீந்தர் மோகன் சர்மா, மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் மற்றும் பாரம்பரிய கைவினை தொழில் முனைவோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு சார்பில் தெற்கு ரெயில்வே செய்து இருந்தது. முன்னதாக இந்த திட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தது பெரிய திரையில் காட்டப்பட்டது.


Next Story