சந்தேஷ்காளி விஷயத்தில் பொய்.. கவர்னர் மீதான மானபங்க புகாரில் மவுனம்: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி


கவர்னர் மாளிகை பெண் ஊழியர் மானபங்கம் தொடர்பான புகாரில் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
x

கவர்னர் மாளிகையின் பெண் ஊழியர் மானபங்கம் தொடர்பான புகாரில் கவர்னர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

ஹூக்ளி:

சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மீதான பாலியல் புகார், அவருக்கு எதிராக பெண்கள் நடத்திய தொடர் போராட்டம், அதனை மையப்படுத்தி நடைபெறும் அரசியல் என மேற்கு வங்காளத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது.

சந்தேஷ்காளி போராட்டம் தொடர்பான வீடியோக்களை கடந்த சில தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்து வருகிறது. சந்தேஷ்காளி மண்டல பா.ஜ.க. தலைவரை தொடர்புபடுத்தி வெளியான இந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நேற்று வெளியான புதிய வீடியோவில், ஷேக் ஷாஜகானுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 70 பெண்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டது என்று மண்டல பா.ஜ.க. தலைவர் கயல் கூறுவதை கேட்க முடிகிறது.

சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வின் ஜோடிக்கப்பட்ட கதைகளின் உண்மை வெளிவருகிறது என திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா கூறி உள்ளார். ஆனால் இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என பா.ஜ.க. கூறுகிறது. சந்தேஷ்காளியின் சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டுகிறார்கள் என்றும், ஷேக் ஷாஜஹானை காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் முயற்சி செய்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி இன்றைய பிரசாரத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் அம்தங்காவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மம்தா பேசியதாவது:-

சந்தேஷ்காளி விவகாரத்தில் பிரதமர் மோடி இன்னும் பொய்களையே கூறுகிறார். பா.ஜ.க.வின் சதி பகிரங்கமாகிவிட்டதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

கவர்னர் மாளிகை பெண் ஊழியரை மானபங்கம் செய்தது தொடர்பான புகாரில் கவர்னர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, பா.ஜ.க.வின் உண்மையான பெண்கள் விரோத குணத்தை காட்டுகிறது. பிரதமர் மோடி, கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தபோது, கவர்னரை ராஜினாமா செய்யும்படி ஏன் கேட்கவில்லை? பெண்கள் இப்போது கவர்னர் மாளிகைக்கு செல்லவே பயப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story