தேச பாதுகாப்பில் பிரதமர் மோடியின் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்


தேச பாதுகாப்பில் பிரதமர் மோடியின் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 4 May 2024 5:11 PM GMT (Updated: 4 May 2024 5:30 PM GMT)

எல்லை பகுதியில் ஒரு தீர்வு ஏற்படாதவரை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் இயல்பு நிலையை எதிர்பார்க்க கூடாது என சீன வெளியுறவு துறை மந்திரியிடம் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கூறினார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு இன்று பேசினார். அப்போது சீனாவுடனான பதற்ற நிலை பற்றி குறிப்பிட்ட அவர், 4 ஆண்டுகளில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிறைய படைகளை குவித்து, இந்தியா மீது நெருக்கடி ஏற்படுத்தப்பட்டது.

அதனை எதிர்கொள்ள ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ படைகள் குவிக்கப்பட்டன. அவர்களை நாம் கடுமையாக எதிர்கொண்டோம். சீனாவை அடுத்துள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் இன்று படைகளை குவித்துள்ளது. நாம் தெளிவாகவும், வலிமையாகவும் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

தேச பாதுகாப்பு என வரும்போது, பாகிஸ்தானின் எல்லை கடந்த பயங்கரவாதம் ஆகட்டும், எல்லை பகுதியில் சீனாவின் நெருக்கடியாகட்டும், பிரதமர் மோடியின் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.

மியான்மர் நாட்டுடன் நில எல்லை ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பு, கடந்த காலங்களில் அந்நாட்டு எல்லை பகுதியில் நமக்கு எதிராக இருந்த பயங்கரவாதம் ஆகட்டும், வங்காளதேச நாட்டிடம் இருந்து வந்த பயங்கரவாதம் கூட ஆகட்டும், நாம் சமரசம் செய்து கொள்ளவில்லை என பேசியுள்ளார்.

நமக்கு பாரதமும் அதன் பாதுகாப்புமே முன்னுரிமை என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதில் எந்தவித சமரசமும் கிடையாது என்று அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

எல்லை பகுதியில் ஒரு தீர்வு ஏற்படாதவரை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் இயல்பு நிலையை அவர்கள் எதிர்பார்க்க கூடாது என சீன வெளியுறவு துறை மந்திரியிடம் கூறியிருக்கிறேன் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கூறினார்.


Next Story