டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு நேரில் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் இன்று தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. வழக்கம்போல் நடைபெற்ற சந்திப்பு இது என ராஷ்டிரபதி பவன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
நாட்டின் முன்னேற்றம், குறிப்பிடும்படியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு எதிரான பரவலான போராட்டங்கள் உள்ளிட்டவை பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெற உள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியில் உள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.