தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த நாடு இந்தியா: சர்வதேச எரிசக்தி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு


தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த நாடு இந்தியா: சர்வதேச எரிசக்தி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
x

தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த நாடு இந்தியா என்று சர்வதேச எரிசக்தி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

பெங்களூரு,

ஜி20 நாடுகள் சபையின் ஒரு அங்கமாக மத்திய மின்சாரத்துறை சார்பில் சர்வதேச எரிசக்தி மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இது, இந்தியா தலைமை தாங்கும் ஜி20 நாடுகளின் முதல் பெரிய எரிசக்தி நிகழ்ச்சி ஆகும். 21-வது நூற்றாண்டில் உலகத்தை நிர்ணயம் செய்வதில் மின்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. உலகில் மின் வினியோகம், புதிய ஆதாரங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் இந்தியா ஒரு வலுவான பங்களிப்பை வழங்குகிறது.

தொழில் முதலீடுக்கு உகந்தநாடு

இந்தியாவில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி துறையில் வாய்ப்புகள் குவிந்துள்ளன. இது இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதை உறுதி செய்யும். உலகில் தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த நாடு இந்தியா. இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பத்தாண்டுகளுக்குள், ஆண்டுக்கு 5 மில்லியன் டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும். இந்த துறையில் ரூ.8 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் சாம்பல் ஹைட்ரஜன் குறைக்கப்பட்டு, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்படும். இதிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.

நடப்பு பத்தாண்டு நிறைவடைவற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 50 சதவீதம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். பெட்ரோலில் எத்தனால் சேர்ப்பதை 10 சதவீதமாக அதிகரித்தோம். இதை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இந்த திட்டத்தை நான் இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளேன். முதல்கட்டமாக நாட்டின் 15 நகரங்களில் இதை அமல்படுத்தியுள்ளோம். அடுத்த 2 ஆண்டுகளில் இது நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும். இந்த எத்தனால் சந்தையிலும் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இந்திய மக்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு வேகமாக மாறி வருகிறார்கள் அடுத்த 2, 3 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் சூரியசக்தி மின் சமையல் தள வசதியை பெறும் என்று மோடி பேசினார்.

வெளிநாட்டு பிரதிநிதிகள்

இந்த சர்வதேச எரிசக்தி மாநாட்டில் பிரதமர் மோடி பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் சேர்க்கப்பட்ட பெட்ரோலில் ஓடும் கார்களை (பசுமை இயக்க பேரணி) கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் சூரிய சக்தியால் இயங்கும் இரட்டை அடுக்கு அடுப்பை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இதுதவிர பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து வடிவமைக்கப்பட்ட ஆடையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

இந்த மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் உள்பட மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாடு நாளை (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது.

ஹெலிகாப்டர் தொழிற்சாலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல். (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்) சார்பில் கர்நாடகத்தின் துமகூரு மாவட்டம் பிதரேஹல்லா காவல் பகுதியில் 615 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை ஆகும். அந்த தொழிற்சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அங்கு ஹெலிகாப்டரை உருவாக்கும் கூடங்களை அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், கர்நாடக முதுல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story