ஜி-20 மாநாட்டிற்காக புதிய கட்டிடம் வரும் 26-ம் தேதி திறப்பு
ஜி-20 மாநாட்டிற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐடிபிஓ வளாகம் வரும் 26-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
டெல்லி,
ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜி-20 தொடர்பான நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.
ஜி-20 மாநாட்டிற்காக டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள ஐடிபிஓ வளாகம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 123 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இதில் பிரம்மாண்டமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதற்கு 'இன்டர்நேஷ்னல் எக்ஸ்பிஷன் அண்ட் கன்வென்ஷன் சென்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கன்வென்ஷன் சென்டரின் லெவல்-3ல் 7,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான இருக்கை வசதி கொண்ட அரங்கம் உள்ளது. இது ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள ஓபரா ஹவுஸின் 5,500 பேர் அமரும் வசதி கொண்ட அரங்கத்தை விட பெரியதாக உள்ளது.
இது உலக அளவில் நடைபெறும் மெகா மாநாடுகள், சர்வதேச உச்சிமாநாடுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற இடமாக உருவாகி உள்ளது.
ஜி-20 மாநாட்டிற்காக இந்த 'இன்டர்நேஷ்னல் எக்ஸ்பிஷன் அண்ட் கன்வென்ஷன் சென்டர்' வரும் 26-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.