ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி


ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க  இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி
x

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும்.

புதுடெல்லி,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள், ஜி-7 என்ற அமைப்பாக செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.

தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு, பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு அழைப்பது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு தலைமை பொறுப்பை ஏற்று மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று மாலை இத்தாலி புறப்பட்டார். 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக இத்தாலி சென்றுள்ளார். இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மாநாடு நடக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு அமர்வில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஆகியவை பற்றியும், அதனால் உலக நாடுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டுக்கு இடையே, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். 14-ந் தேதி இரவு இந்தியா திரும்புகிறார்.

3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். பிரதமர் மோடி, கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி-7 நாடுகளின் வருடாந்திர மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story