உலக அளவில் முன்னேற்றம் : 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!
மேக் இன் இந்தியா திட்டம், உலக அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் உற்பத்தி துறையை மேம்படுத்தும் வகையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அந்த நாட்டு போக்குவரத்து மந்திரியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த தகவலை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு அவர் பெருமிதம் தெரிவித்து இருந்தார். ஜெய்சங்கரின் இந்த பதிவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்த பிரதமர் மோடி, 'இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்விக்கும்! மேக் இன் இந்தியா திட்டம் தொடர்ந்து உலக அளவில் முன்னேறி வருகிறது' என குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல மும்பையில் நடந்த சிறுதானிய உணவு திருவிழாவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டி இருந்தார். இது பாராட்டுக்குரிய முயற்சி என அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த விழா தொடர்பாக மராட்டிய எம்.பி. மனோஜ் கோட்டக் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும்போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் மராட்டியத்தின் விதர்பா பிராந்தியத்தில் 6 சாலை மேம்பாலங்கள் திறக்கப்பட்டதற்கும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். இதைத்தவிர காசி விசுவநாதர் கோவில் மற்றும் பிஹு கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்து இருந்தார்.