ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது. சத்தீஷ்கார் மாநிலம் அக்கட்சிக்கு ஏ.டி.எம். போல் திகழ்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ரூ.7,600 கோடி திட்டங்கள்
காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சத்தீஷ்கார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். தலைநகர் ராய்ப்பூரில் ரூ.7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.
இவற்றில், 4 வழிச்சாலை திட்டம், புதிய ரெயில் பாதை, இந்திய எண்ணெய் கழகத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்டவையும் அடங்கும். ஒரு புதிய ரெயிலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா, ரேணுகா சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுபான ஊழல்
பின்னர், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-
சத்தீஷ்கார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. ஆனால், பெரிய 'கை' (காங்கிரசின் தேர்தல் சின்னம்), அதற்கு எதிராக சுவர்போல் நிற்கிறது. காங்கிரசின் கை, உங்கள் உரிமைகளை பறித்து விடும். மாநிலத்தை கொள்ளையடித்து, அழித்து விடும். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மாநிலத்தில் மதுபானத்துக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது. ஆனால், அதற்கு மாறாக, மதுபானத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துள்ளது. அந்த பணம், காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளது. அந்த பணத்தால் ஏற்பட்ட உட்பூசல் காரணமாகவே, ஆளுக்கு 2½ ஆண்டுகால ஆட்சி என்ற ஒப்பந்தத்தை காங்கிரசால் அமல்படுத்த முடியவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
ஏ.டி.எம்.
மதுபானத்தில் மட்டுமல்ல, ஊழல் நடக்காத துறையே இல்லை. சத்தீஷ்கார் மாநிலம், காங்கிரஸ் கட்சிக்கு ஏ.டி.எம்.மாக இருக்கிறது. ஊழல்தான், காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சித்தாந்தமாக உள்ளது. ஊழல் இல்லாமல், காங்கிரசால் சுவாசிக்க முடியாது. மோசமான ஆட்சிக்கு முன்னுதாரணமாக சத்தீஷ்கார் அரசு திகழ்ந்து வருகிறது. வரும் தேர்தலில், இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர்.
ஒன்று சேரும் கட்சிகள்
ஊழல் கறை படிந்த கட்சிகள் ஓரணியில் திரள முயன்று வருகின்றன. ஒன்றையொன்று சாபமிட்டுக் கொண்டிருந்த கட்சிகள், ஒன்றுசேர காரணம் தேடிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு ஊழல்வாதியும் இதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிக்கும் என்றால், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மோடி உத்தரவாதம் அளிப்பான்.
நக்சல் பயங்கரவாதம்
சத்தீஷ்கார் மாநிலம், நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாக இருந்தது. நக்சல் பயங்கரவாதத்துக்கு வளர்ச்சிதான் மாற்று மருந்து. அதன்படி, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு சாலை, ரெயில் போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டுள்ளது.
நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில், செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, செல்போன் மணி அடிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.