மத்திய அரசின் வெளிப்படையான நிர்வாகமும், மக்களின் பங்கேற்பும் வறுமையை குறைக்க உதவியது : பிரதமர் மோடி


மத்திய அரசின் வெளிப்படையான நிர்வாகமும், மக்களின் பங்கேற்பும் வறுமையை குறைக்க உதவியது : பிரதமர் மோடி
x

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் சுமார் 35 லட்சம் விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் வளர்ந்த இந்தியா யாத்திரை திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். அந்தவகையில் இந்த திட்ட பயனாளிகளை இன்றும் அவர் காணொலி மூலம் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் நாட்டின் வறுமை ஒழிப்பில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பெருமிதத்துடன் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதாவது சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இது மிகவும் ஊக்கப்படுத்தும் ஒரு அறிக்கை. இதன் மூலம் ஏழைகளுக்கு உதவுவதில் சிறந்த மாதிரியை பிற நாடுகளுக்கு இந்தியா எடுத்துக்காட்டி இருக்கிறது. அத்துடன் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. எங்கள் அரசு உருவாக்கி உள்ள வெளிப்படையான நிர்வாகமும், அதன் நேர்மையான முயற்சிகளும், மக்களின் பங்கேற்பும் இந்த வறுமை குறைப்புக்கு உதவி இருக்கிறது.

வளர்ந்த இந்தியா யாத்திரை எனது கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவிக்கவும், இதில் அதிக பயனாளிகளை சேர்க்கவும் வசதியாக இந்த யாத்திரையை ஜனவரி 26-ந்தேதிக்கு பிறகும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. 2 மாதங்களில் இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாகி இருக்கிறது. இது சுமார் 80 சதவீத பஞ்சாயத்துகளை ஏற்கனவே அடைந்து விட்டது. இந்த யாத்திரையின்போது 4 கோடிக்கு மேற்பட்ட மக்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றனர். 50 கோடிக்கு அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் சுமார் 35 லட்சம் விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கு அதிகமான ஏழை குடும்பங்கள் சொந்த வீடு பெற்றுள்ளனர். இவர்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர். இது அவர்களுக்கான அதிகாரமளித்தலுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதும், விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதும் அரசின் முன்னுரிமை ஆகும். இந்தியா வேகமாக மாறி வருகிறது. மக்களின் தன்னம்பிக்கை, அரசு மீதான நம்பிக்கை மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு ஆகியவை எங்கும் தெரிகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story